கலைமகள் எனும் நாமகள்சகல கலைகளுக்கும், கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும், அதி தேவதையாகவும் விளங்குபவள் சரஸ்வதி தேவி. கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி, என பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுகிறாள். சைவ, வைணவ அடியார்கள் மட்டுமின்றி, ஜெயின் மற்றும் புத்த சமய மக்களாலும் வழிபடப்படுகிறாள் சாரதா, மானவி, சரஸ்வதி.

வித்யா, சின்மயி, ஞானவல்லி, ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞானப்பிராட்டி, நாமடந்தை, நாவேறு செல்வி, நாவுக்கரசி, நாமிசைக்கிழத்தி, கலைமகள், வாக்கின் செல்வி, வாக்குதேவி, வாக்கு வாதினி, அன்னவாகனி, சொல்மங்கை, சொல்லிருங்கிழத்தி என பல்வேறு நாமங்களால் நாமகள் பாவலர்களால் பாடப்படுகிறாள். ஆயகலைகள் அனைத்திற்கும் தலைவி, இந்த வீணா வாணியே.

பிரமனின் மனைவி என்பதால் பிராமி என்றும், கலைகளின் பிறப்பிடமாக விளங்குவதால் சரஸ்வதி என்றும் தேவி அழைக்கப்படுகிறாள். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்தாமரையில் அமர்ந்து, வீணை ஏந்தி நாதம் எழுப்பியவண்ணம், பின்வலக்கரத்தில் அக்ஷ மாலையும், முன்வலக்கரத்தில் வியாக்கின முத்திரையும், பின் இடக்கரத்தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில் சுவடியும் தாங்கி எழிலுற வீற்றிருப்பாள் என ஆகமங்கள் கூறுகின்றன.

நான்முகன் நாவில் கலைமகள் குடியிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே, ஞானம் அருளுபவர்கள். அதனால் ஜெபமாலை, சுவடி ஏந்தி இருவருமே காணப்படுகிறார்கள். ஆசை அழிந்தால் தான் ஞானம் பிறக்கிறது எனவே, இருவருமே ஜடாமகுடம், ஸ்படிக மாலை, சந்திரகலை சூடி, ஆணவம் அழிக்கும் மூன்றாம் நெற்றிகண்ணை கொண்டுள்ளனர் என வேதம் குறிக்கின்றது.

பிரமனுக்கு தனி கோயில்கள் இல்லாவிட்டாலும், பிரம்மனின் நாயகி கலைமகளுக்கு நாகை மாவட்டம், கூத்தனூரில் தனிக்கோயில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் வழிபடப்பட்ட இந்த தேவி, கலைகளை வழங்கும் வரப்பிரசாதி. சரஸ்வதி பூசை அன்று தேவியின் திருப்பாதம் வெளிமண்டபம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், அதை பக்தர்கள் மலராலும், குங்குமத்தாலும் அர்ச்சித்து வழிபடுவர். தேர்வில் வெற்றி பெற, கலைகளில் தேர்ச்சி பெற, விரும்பிய துறையில் பயில, பணி புரிய வரம் அருள்பவள் சரஸ்வதியே. இங்கு அவளை வழிபட வேண்டிய யாவும் உடனே கிட்டும்.

சரஸ்வதி தேவியை ரோமானியர்கள் மினர்வா என்றும், கிரேக்கர்கள் ஆதீனே என்றும் தேவதைகளாக உருப்படுத்தி வணங்கினர். மூன்று முகமும், ஆறு கரங்களும் கொண்ட மன்சூஸ்ரீ என்ற பெயரால் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். ஜைனர்களும் 16 வித்யாதேவியருடன் கூடிய சரஸ்வதியை வழிபடுகிறார்கள். சிவன் ஆலயங்கள் பெரும்பாலானவற்றில் சரஸ்வதி தேவி கோஷ்ட தேவியாகவும், தனி சந்நிதி இறைவியாகவும் இருக்கிறாள். மற்ற தெய்வ கோயில்களிலும் மாடங்களிலும், கோபுரங்களிலும், நுழைவாயில் சிற்பங்களிலும் என எங்கும் சரஸ்வதி காணப்படுகிறாள்.

சரஸ்வதி நதியாக